கோவை: கோவையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் தமிழகம் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆந்திர அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. கரன் ஷீண்டி 55, சசிகாந்த் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் கரன் ஷீண்டி ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், சசிகாந்த் 4 ரன்கள், சோயப் முகமது கான் 18 ரன்கள், அய்யப்பா பண்டாரு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆந்திர அணி 100.1 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தமிழக அணியின் சார்பில் வாரியர், சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்னேஷ் 2, அஜித்ராம், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழத்தினர்.
அதைத் தொடர்ந்து தமிழக அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெகதீசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபராஜித், சாய் சுதர்சனுடன் இணைந்து சீரான வேகத்தில் ரன் குவித்தார். சதம் விளாசிய சாய் சுதர்சன் 113 ரன்களில் லலித் மோகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் பாபா இந்திரஜித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், அரைசதம் விளாசிய பாபா அபராஜித் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கினர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களும், விஜய் சங்கர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஆந்திர அணி சார்பில் லலித்மோகன் 2 விக்கெட்டுகளையும், சசிகாந்த், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க உள்ளது.