எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்த மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள டாப் 5 வெளிநாட்டு வீரர்கள் குறித்து பார்ப்போம்.
இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கூடுதலாக 5 கோடி ரூபாய் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். எப்படியும் இந்த முறை ஆல்-ரவுண்டர்களுக்கு ஏலத்தில் அணிகளிடையே அதிக டிமாண்ட் இருக்கும் எனத் தெரிகிறது. டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.
கேமரூன் க்ரீன்: 23 வயதான ஆஸ்திரேலிய நாட்டு வீரர். ஏலத்தில் இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. பேட்டிங் மற்றும் பவுலிங் என சகலத்திலும் கலக்கும் தரமான ஆல் ரவுண்டர். இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 173.75.
பென் ஸ்டோக்ஸ்: இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரது பெயரே முகவரி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பாணியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் ஆல் ரவுண்டர். நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார். அதற்கு உதாரணமாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சொல்லலாம். இரண்டிலும் டாப் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பவுலிங் எக்கானமி கொண்டுள்ளார்.
சாம் கரன்: இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர். முக்கியமாக ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே கடத்துவதில் வல்லவர். அற்புதமான பவுலர். அண்மையில் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அதன் மூலம் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஹாரி ப்ரூக்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர். 23 வயதான இவர் தரமான பார்மில் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்று சதங்கள் பதிவு செய்து அசத்தியுள்ளார். இவரின் அடிப்படை விலை ரூ.1.5 கோடி. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடியவர். 48 பந்துகளில் சதம் பதிவு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் கச்சிதமாக பொருந்துகிற பேட்ஸ்மேன்.
ஷகிப் அல் ஹசன்: வங்கதேச வீரர். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். மொத்தம் 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது இடது கை சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடுவது சற்று கடினம். இவரது அடிப்படை விலை ரூ.1.5 கோடி. கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருந்தார்.