சென்னை: வரும் வெள்ளிக்கிழமை அன்று ஐபிஎல் 2023 சீசனுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் எதிர்வரும் சீசனை தோனிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காவும் தான் வெல்ல விரும்புவதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
25 வயதான ருதுராஜ், கடந்த 2020 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 1207 ரன்கள் குவித்துள்ளார். இதில் கடந்த 2021-ல் 635 ரன்களை குவித்து அசத்தி இருந்தார். அந்த முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நவம்பரில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி அசத்தி இருந்தார்.
“மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை ரசிகர்களுக்காக இந்த ஐபிஎல் தொடரை வெல்ல விரும்புகிறேன்” என ருதுராஜ் தெரிவித்துள்ளார். 2020 சீசனின் போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி சொல்லி இருந்தார். அப்போது முதலே ருதுராஜ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் சீசன் முதல் சென்னை உட்பட பத்து நகரங்களிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.