விளையாட்டு

16 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய கரன் சர்மா: இந்தியா ஏ அணி திரில் வெற்றி

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஏ அணிகளுக்கு இடையிலான 4 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியை இந்தியா ஏ அணி ஒரு பந்து மீதமிருக்கும்போது திரில் வெற்றி பெற்றது.

டார்வினில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜஸ்டின் ஆன்டாங் தலைமை தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா ஏ அணி இந்த வெற்றியுடன் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.

ராபின் உத்தப்பா, உன்முக்த் சந்த் முதல் விக்கெட்டுக்காக 84 ரன்களைச் சேர்த்தனர். பிறகு மனன் வோராவுடன் இணைந்து உன்முக்த் சந்த் மேலும் 68 ரன்கள் சேர்க்கப்பட்டது. வோரா, உன்முக்த் இருவரும் அரைசதம் அடித்தனர்.

இடையில் வந்த பேட்ஸ்மென்களான திவாரி, ஜாதவ் சொதப்ப 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது இந்தியா ஏ. பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷி தவான் இணைந்து 44 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ஆனால் இருவரையும் மெர்சண்ட் டீ லாங்கே வீழ்த்த 234/8 என்று ஆனது. ஆனால் ஐபிஎல் புகழ் கரன் சர்மா இறங்கி கடைசி நேர அனாயச சுழற்றலில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 16 பந்துகளில் 39 ரன்களை விளாச இந்தியா ஏ அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 276 ரன்களை எட்டி திரில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா ஏ அணியில் ரூசோ 137 ரன்களை விளாசினார். பந்துவீச்சிலும் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தி அசத்திய கரன் சர்மா பேட்டிங்கில் தோல்வியை வெற்றியாக மாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT