புது டெல்லி: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்நிலையில், இரு அணிக்கும் தனது வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் கோல்களை சரி சமமாக பதிவு செய்து அசத்தின. இதில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் சிறப்பான கம்பேக் கொடுத்து முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணி பதிவு செய்த மூன்று கோல்களையும் எம்பாப்பே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கால்பந்து போட்டிகளில் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக இது நினைவுகூரப்படும். உலகக் கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள். இந்த தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்த அற்புதமான வெற்றியினால் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
களத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்ட பிரான்ஸ் அணிக்கு பாராட்டுகள். இந்த தொடர் முழுவதும் தங்களின் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தனர்” என பிரதமர் மோடி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.