இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது.
வார்தா புயலால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்த நிலையில் ஆடுகளத்தின் மைய பகுதிக்கும், அவுட் பீல்டுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் போட்டி குறித்த நேரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
வார்தா புயலால் மைதானத்தில் சேதம் அடைந்த சைட் ஸ்கிரீனை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. புயலால் ஆடுகளத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற போதிலும் மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரத்தன்மை காணப்பட்டது.
இதையடுத்து ஆடுகளத்தை உலரவைக்கும் விதமாக நிலக்கரியை பெரிய அளவிலான டிரேவில் வைத்து எரித்து அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தின் மூலம் ஆடுகளத்தில் இருந்த ஈரத்தன்மையை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை பார்வையிட்ட பிசிசிஐ-யின் தென் மண்டல ஆடுகள வடிவமைப்பாளர் பி.ஆர்.விஸ்வநாதன் கூறும்போது, “போட்டிக்கான ஆடுகளமும், அவுட் பீல்டும் சிறந்த நிலையில் உள்ளது. ஆனால் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை கூற இயலாது’’ என்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் கூறும்போது, “நேற்று முன்தினம் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் துரிதமாக நடைபெற்ற பணிகளால் அனைத்து பிரச்சி னைகளும் தீர்க்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து பணி களையும் முடித்து விட்டோம். திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
மைதானத்தில் வடிகால் சிறப்பாக உள்ளது. இதனால் அவுட் பீல்டில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால் அதேவளையில் பேட்டிங் பயிற்சி ஈடுபடும் பகுதி துரதிருஷ்ட வசமாக ஈரமாக காணப்பட்டது. இதனால் இரு அணிகளும் பீல்டிங் பயிற்சியில் மட்டுமே கலந்து கொள்ள உள்ளன’’ என்றார்.