காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி தன் முதல் போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்தியது.
உலகத் தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள இந்தியா, 31ஆம் நிலையில் இருக்கும் வேல்ஸ் அணியை முழு ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்தியா முதல் பாதியில் திக்கித் திணறியது. இரு அணிகளும் ஆஃப் டைம் போது 1-1 என்று சமநிலையில் இருந்தது.
20வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ரகுநாத் கோலாக மாற்றி முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் 23வது நிமிடத்தில் வேல்ஸ் அணி சமன் செய்து அதிர்ச்சி அளித்தது.
இடைவேளைக்கு முன்பு இரு அணிகளுக்கு மேலும் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளினால் பயன் எதுவும் ஏற்படவில்லை.
வேல்ஸ் அணியின் ஆட்டத்தினால் அதிர்ச்சியடைந்த இந்திய வீரர்கள் இடைவேளைக்குப் பிறகு ஒரு குறிக்கோளுடன் விளையாடினர். இதன் பலனாக 6 நிமிடங்களிலேயே பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை ருபிந்தர் கோலாக மாற்ற இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது.
அதன் பிறகு 5 நிமிடங்களில் சுனில், திம்மையா அருமையாகப் பந்தைக் கடத்தி வர சாண்டி கோலாக மாற்றினார்.
நாளை இந்தியா தனது அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியைச் சந்திக்க வேல்ஸ் அணி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.