விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் அஸ்வின், ஜடேஜா

இரா.முத்துக்குமார்

1974-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2 இந்திய ஸ்பின்னர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். ஐசிசி பவுலிங் தரவரிசையில் அஸ்வின் முதலிடமும், ஜடேஜா 2-வது இடத்திலும் உள்ளனர்.

1974-ம் ஆண்டு இந்திய ஸ்பின் மேதைகளான பிஷன் சிங் பேடி மற்றும் பகவத் சந்திர சேகர் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர், அதன் பிறகு தற்போது அஸ்வின், ஜடேஜா இந்திய ஸ்பின்னுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சென்னை டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 7/48 என்று இங்கிலாந்தை நசுக்கிய ஜடேஜா தொடரில் 26 விக்கெட்டுகளை 25.84 என்ற சராசரியில் எடுக்க அஸ்வின் 28 விக்கெட்டுகளை 30.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் சரிந்த மொத்த விக்கெட்டுகள் இந்தத் தொடரில் 94. இதில் அஸ்வின், ஜடேஜா இருவரும் எடுத்தது 54 இங்கிலாந்து விக்கெட்டுகளை.

இதனால் ஜோஷ் ஹேசில்வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், ரங்கனா ஹெராத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜடேஜா 2-ம் இடத்துக்கு சரசரவென முன்னேறியுள்ளார். தற்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் 8 புள்ளிகள் இடவெளி உள்ளது.

மேலும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் அஸ்வினைப் பிடிக்க ஜடேஜா 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் அதிகபட்ச ஸ்கோருடன் 224 ரன்களை 37.33 என்ற சராசரியில் எடுத்துள்ளார் ஜடேஜா. அஸ்வினோ 4 அரைசதங்களுடன் 43.71 என்ற சராசரியுடன் 306 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பவுலிங் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT