நானொரு ராசியில்லா ராஜா பாடல் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நிச்சயம் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பொருந்தும்.
உலகின் ஆகச் சிறந்த கால்பந்துவீரர்களில் ஒருவர், போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டன், 5 முறை பலோன்டி ஆர் விருதுகள், 4 முறைஐரோப்பியன் கோல்டன் ஷூ விருதுகள், 7 கால்பந்து லீக் தொடர்களில் சாம்பியன் உட்பட 32 கால்பந்து கோப்பைகளைப் பெற்றுத் தந்தவர், சாம்பியன்ஸ்லீக் போட்டியில் அதிக முறை விளையாடியவர் (183 ஆட்டங்கள்), அதிக கோல்கள் அடித்தவர் (140), அதிகமுறை கோலடிக்க உதவியவர் (42முறை), 1,100-க்கும் மேற்பட்ட தொழில் முறைகால்பந்துப் போட்டிகளில் விளையாடியவர் என சாதனைகள் இவர் பின்னே வரிசைகட்டி நிற்கின்றன.
ஆனால் உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் இவருக்கு சாதனைகள் வேதனையைத் தந்துவிடும். கத்தார் போட்டி, இவருக்கு 5-வது உலகக் கோப்பைபோட்டியாகும். இவர் கடந்த 5உலகக் கோப்பை போட்டியிலும் பங்கேற்று அனைத்து தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர்என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
37 வயதாகும் ரொனால்டோ பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பைத் தொடர் என்பதால், இந்த முறை போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், மொராக்கோ அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி வெளியேறிவிட்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ரொனால்டோவை, அந்த அணியின்பயிற்சியாளர் சாண்டோ களமிறக்கவில்லை. இரண்டாம் பாதியில்தான் ரொனால்டோ களமிறங்கினார். நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ரொனால்டோ இதுவரை கோல் அடித்ததில்லை. அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஆட்டத்தின் கடைசிநிமிடம் வரை ரொனால்டோவால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக,களத்தில் கதறி அழுத ரொனால்டோவைப்பார்த்து ரசிகர்களும் அழுத சம்பவம்தான்நடந்தது.
கால்பந்து மைதானத்திலிருந்து வீரர்களின் ஓய்வறை வரை அழுது கொண்டேசென்றார் ரொனால்டோ. இதுவரைஉலகக் கோப்பைத் தொடரின் 8 நாக் அவுட் போட்டிகளில் விளையாடி உள்ளரொனால்டோ, ஒரு கோல் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த உலகக் கோப்பை தொடர் வரும்போது ரொனால்டோவுக்கு வயது 41 ஆகியிருக்கும். அப்போது அவர் போட்டியில் பங்கேற்பாரா... பங்கேற்றாலும் நாக்-அவுட் சுற்றில் கோலடித்து அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.