விளையாட்டு

விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித்

இரா.முத்துக்குமார்

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்போது, “கோலி ஒரு உலகத்தர வீரர், கடந்த 18 மாதங்களாக இந்திய அணியை அபாரமாக வழிநடத்தி வெற்றிகளை ஈட்டி வருகிறார். நிறைய போட்டிகளை உள்நாட்டில் ஆடியுள்ளது இந்திய அணி. உடல்மொழி ரீதியாக கோலியிடம் மேம்பாடு தெரிகிறது.

களத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் கோலி. ஆனால் இதிலும் அவர் முன்னேற்றம் அடைந்துள்ளார் என்றே கருதுகிறேன். எங்களைப் பொறுத்தவரை ஒரு அணியாக அவரது வலுவான உணர்ச்சி நிலையிலிருந்து அவரை விலக்கி வைக்க முயற்சி செய்வோம், அவரைக் கொஞ்சம் சீண்டி கோபமூட்ட முயற்சி செய்வோம்.

அவரை இந்த உணர்ச்சி நிலைக்கு ஆளாக்கி வீழ்த்தினால் இந்திய அணி பலவீனமடையக்கூடிய சாத்தியமுள்ளது.

நாங்கள் பிப்ரவரியில் இந்தியா செல்கிறோம். சந்தேகமில்லாமல் அது ஒரு மிகக்கடினமான தொடராகவே இருக்கும். அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, அங்கு நாங்கள் தோல்வியுறும் அணி என்ற பிம்பத்துடன் தான் செல்கிறோம், இப்படிப்பட்ட நிலையில் தொடரை வென்றால் அருமையானதாகவே இருக்கும். நிச்சயம் துணைக்கண்டங்களில் இதுவரை வெளிப்படுத்திய ஆட்டத்தை விட சிறப்பாக ஆடுவோம்” என்றார்.

SCROLL FOR NEXT