இஸ்லாமாபாத்: முதன்முறையாக அரபு - ஆப்பிரிக்க - முஸ்லீம் அணி (மொராக்கோ) ஒன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதற்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி.
அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது போர்ச்சுகல். இம்முறையும் ரொனால்டோ ஆடவில்லை. இப்போட்டியில் 1 -0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது.
36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்தது மொராக்கோ. தற்போது கத்தார் உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில் உலகப் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்தவகையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்ச்சுகல்லை தோற்கடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணிக்கு எனது வாழ்த்துகள்.முதன்முறையாக அரபு, ஆப்பிரிக்க - முஸ்லிம் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. அரையிறுதியை தாண்டியும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.