அடிலெய்ட்: கிரிக்கெட் போட்டிகளை விரும்பிப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் விதமாக ஆஸ்திரேலிய நாட்டின் டிவி சேனல் நிறுவனமான ஃபாக்ஸ் கிரிக்கெட் புது முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது. ஆடுகளத்தில் பேட் செய்யும் வீரரின் வாய்ஸை, அவரது மன ஓட்டத்தை மைக் மூலம் கேட்ச் செய்வதுதான் அது. இதற்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.
வார்னர், ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களை அடுத்து அண்மையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவுக்கு இந்த மைக்கை வைத்துள்ளது ஃபாக்ஸ் கிரிக்கெட். இங்கு வர்ணனையாளர்களின் வாய்ஸ் மியூட் செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 129 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்களை எடுத்திருந்தார். அவரது இந்த இன்னிங்ஸில்தான் மைக் வைத்துள்ளது அந்த டிவி சேனல்.
காட் எடுப்பது, பந்தை எதிர்கொள்ளும் போது, ரன் ஓடும் போது, எதிரே உள்ள தனது பார்ட்னருடன் பேசும் போது என அவரது அனைத்து பேச்சும் இந்த மைக்கில் பதிவாகி உள்ளது. அதை அப்படியே ஆடியோ விஷுவல் ஃபார்மெட்டில் கோர்வையாக சேர்த்து பகிர்ந்துள்ளது ஃபாக்ஸ் கிரிக்கெட்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இது இந்தியாவுக்கு எப்போது வரும்?’ என்பதில் தொடங்கி பல்வேறு வகையிலான தங்கள் கமெண்டுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் பீல்டிங் செய்யும் அணியின் வீரர்கள் வர்ணனையாளர்களுடன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.