அப்ரார் அகமது 
விளையாட்டு

ENG vs PAK | அறிமுக டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை அள்ளிய அப்ரார் அகமது

செய்திப்பிரிவு

விளையாட்டில் தீவிர ஆர்வத்துடன் ஈடுபடும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற பெருங்கனவு இருக்கும். அந்தக் கனவை இன்று மெய்ப்பிக்கச் செய்ததோடு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையும் படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் மேஜிக் ஸ்பின்னர் அப்ரார் அகமது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் வீரராக அவர் களம் கண்டார். முதல் இன்னிங்ஸில் 22 ஓவர்கள் வீசி 114 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவர் மெய்டன்.

ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று முல்தான் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 7 விக்கெட்டுகளை அறிமுகம் வீரர் அப்ரார் கைப்பற்றினார். கடந்த 1950-க்கு பிறகு ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் தொடக்க செஷனில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சார்லி டர்னர் (1887), இங்கிலாந்து வீரர் மார்டின் (1890), மேற்கிந்திய தீவுகள் வீரர் வேலன்டைன் (1950) முதல் செஷனில் 5 விக்கெட்டுகளை தங்கள அறிமுகம் போட்டியில் வீழ்த்தி உள்ளனர்.

யார் இவர்? - இவர் அதிகாரபூர்வமாக லெக் ஸ்பின்னர் என அறியப்பட்டாலும் கூக்ளி மற்றும் கேரம் பந்துகள் வீசும் திறன் கொண்டவர். இலங்கையின் மகீஷ் தீக்‌சனா போல் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், கேரம் பந்துகள் என வெரைட்டியாக வீசும் மற்றொரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். இதனை அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. பந்தை இவர் கடுமையாக ஸ்பின் செய்வது கராச்சி கிரிக்கெட் ஆர்வலர்களை கவர இவர் கவனம் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் மண்டலங்களில் மிகவும் பலவீனமானது கராச்சி மண்டலம்தான்.

ஆனால், அங்கிருந்து வந்த இவர் 2016-ம் ஆண்டில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். ரஷீத் லத்தீப் அகாடமியில் இவரது பந்துவீச்சு பரிணாமம் அடைந்தது. கராச்சி கிங்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் இவரது பெயர் வெளி உலகிற்கு தெரியவந்தது. இயான் மோர்கனுக்கு இவர் 7 டாட் பால்களை வீசியது பேசு பொருளானது. இந்தப் போட்டியில் இயான் மோர்கன் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்ரார் அகமதுவை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரது பந்துவீச்சை பார்த்து இலங்கை ஜாம்பவான்கள் ஜெயவர்தனே மற்றும் சங்கக்காரா அசந்துவிட்டனர்.

இவரது பயிற்சியாளர் மஸ்ரூர் இவரைப் பற்றி கூறும்போது, “அனைத்து பார்மெட்டிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர். ஏனெனில் இவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் கலையை அறிந்தவர். பல விதமான பந்துகளை வீசி திணறடிப்பவர். இவர் பாகிஸ்தானின் முக்கிய பவுலராவது உறுதி” என சொல்லியுள்ளார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஷகீல், 32 ரன்கள் எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT