ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி தேவைப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராசா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் தங்கள் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என அவர் சொல்லி இருந்தார். இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார். அதே நேரத்தில் முன்பு அவர் சொல்லிய கருத்தையும் மாற்றி சொல்லியுள்ளார்.
2012-13 சீசனுக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக விளையாடுவதில்லை. அதன் பிறகு இரு அணிகளும் இதுவரையில் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.
“பாதுகாப்பு சிக்கல் காரணமாக பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு அனுப்ப மறுத்தால் என்ன செய்ய முடியும்? இது உணர்வுபூர்வமான விவகாரம். இதை ஆரம்பித்து வைத்தது பிசிசிஐ. அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியிருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா vs பாகிஸ்தான் போட்டி தேவை.
ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போட்டி ஏன் என்ற கேள்விக்கு கால்பந்து விளையாட்டு பலவற்றுக்கும் தீர்வு கொடுக்க முடியும் என ஃபிஃபா தலைவர் சொல்லி இருந்தார். ஐசிசி உடன் சற்றே நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போது 90 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். இங்கு பேட் மற்றும் பந்து பேச வேண்டும் என கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.