டாகா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி களம் காண்கிறது. அதை முன்னிட்டு இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியது.
இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை மூன்றாவது போட்டி வரை கொண்டு செல்ல முடியும். தோல்வியை தழுவும் பட்சத்தில் வங்கதேச அணி தொடரை வெல்லும்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவனை கொண்டு விளையாடுமா அல்லது ஆடும் லெவனில் மாற்றம் செய்யுமா என்பது தற்போது பேசப்பட்டு வருகிறது.