ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதியில் ஐதராபாத் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களும், ஐதரா பாத் அணி 280 ரன்களும் எடுத்தன. 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 83.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந் தது. ஆதித்யா தாரே 57, லாடு 46 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் தரப் பில் முகமது சிராஜ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 232 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐதராபாத் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 42 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப் புக்கு 121 ரன்கள் எடுத்தது. அனிருத் 40, மிலிந்த் ரன் ஏதும் எடுக்காத நிலையில் களத்தில் இருந்தனர்.
வெற்றிக்கு 111 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 3 விக்கெட் களுடன் நேற்று கடைசி நாள் ஆட் டத்தை ஐதராபாத் தொடர்ந்து விளை யாடியது. சிறப்பாக விளையாடிய அனிருத் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக மிலிந் தும் ரன்கள் சேர்த்தார்.
இதனால் அணியின் ஸ்கோர் சற்று உயர தொடங்கியது. 7-வது விக்கெட்டுக்கு மிலிந்த்-அனிருத் ஜோடி 64 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 65-வது ஓவரை வீசிய மித வேக பந்து வீச்சாளரான அபிஷேக் நாயர் இரு விக்கெட்களை வீழ்த்த ஐதராபாத் அணியின் தோல்வி உறுதியானது.
இந்த ஓவரில் மிலிந்த் 29 ரன்களும் அடுத்து வந்த முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்தனர். எனினும் கடைசி வீரராக களமிறங்கிய ரவி கிரணுடன் இணைந்து அனிருத் போராடினார்.
ஆனால் அது வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. 13 பந்துகளில் ஒரு ரன் சேர்த்த ரவி கிரண், அபிஷேக் நாயர் பந்தில் நடையை கட்ட ஐதராபாத் அணி 71 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அனிருத் 187 பந்துகளில், 4 பவுண் டரிகள், 2 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக் காமல் இருந்தார். மும்பை அணி தரப்பில் அபிஷேக் நாயர், கோகில் ஆகியோர் தலா 5 விக்கெட்கள் கைப் பற்றினர். ஆட்ட நாயகனாக அபிஷேக் நாயர் தேர்வானார். ஆல்ரவுண்டரான அவர் முதல் இன்னிங்ஸ் அரை சதம் அடித்ததுடன் 3 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை அணி அரை இறுதியில் வரும் ஜனவரி 1-ம் தேதி தமிழக அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் ராஜ்கோட்டில் நடை பெறுகிறது.