விளையாட்டு

FIFA WC 2022 | “1958ல் எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதி” - மருத்துவமனையில் இருந்தபடி பிரேசிலை ஊக்கப்படுத்திய பீலே

செய்திப்பிரிவு

சாவோ பாவ்லோ: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குரூப் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆனால் அதே நேரத்தில் கேமரூனிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயமடைந்து ஓய்வில் உள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தென் கொரிய அணி லீக் ஆட்டங்களில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை வீழ்த்தியிருந்தது. இதுவரை, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரேசில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த ஆட்டத்தை மருத்துவமனை படுக்கையில் இருந்து பார்ப்பேன் என்று கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவனும் முன்னாள் பிரேசில் வீரருமான பீலே தெரிவித்துள்ளார். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் பீலே. கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் 'பலியேட்டிவ் கேர் எனப்படும் இறுதி கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தாலும் உலகக் கோப்பையில் தனது நாட்டை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று நடைபெறும் ஆட்டத்தை பார்ப்பேன் என்று பீலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “1958ல் (பீலே முதல் உலகக்கோப்பை வென்ற ஆண்டு), எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறுவேற்றுவது எப்படி என்பதை சிந்தித்துக்கொண்டே தெருவில் நடந்தேன். இன்று பலர் இதேபோன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளனர் என்றும் அவர்கள் முதல் உலகக் கோப்பையை வெல்வதற்காக சென்றுள்ளார்கள் என்பதையும் நான் அறிவேன். நானும் மருத்துவமனையில் இருந்து ஆட்டத்தை பார்ப்பேன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நான் இருப்பேன். குட் லக்" என்று பதிவிட்டுள்ளார். பிரேசில் ஆட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருக்கும் நிலையில் பீலேவின் இந்தப் பதிவு வீரர்களை ஊக்கப்படுத்தும் என்று அந்த அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT