அல் கோர்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. இந்த தொடரில் ஹேரி கேன் முதல் முறையாக கோல் பதிவு செய்ததும் இந்தப் போட்டியில்தான். கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 6 கோல்களை பதிவு செய்திருந்தார் கேன். அந்தத் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரரும் அவர்தான்.
கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முதல் சில நிமிடங்கள் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுத்தனர் செனகல் வீரர்கள். ஆனால், முதல் பாதியின் கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்களை பதிவு செய்தது இங்கிலாந்து.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்தது இங்கிலாந்து அணி. மொத்த ஆட்ட நேரத்தில் பந்தை 62 சதவீதம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இங்கிலாந்து அணி. அதன் மூலம் 589 பாஸ்களை மேற்கொண்டது அந்த அணி. செனகல் அணியால் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது இங்கிலாந்து.