இரண்டு கோல்களை பதிவு செய்த எம்பாப்பே 
விளையாட்டு

FIFA WC 2022 | முத்தான மூன்று கோல்: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

செய்திப்பிரிவு

அல் துமானா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது பிரான்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நடப்பு சாம்பியனான அந்த அணி.

கத்தார் நாட்டின் அல் துமானா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் வெற்றிக்காக பலப்பரீட்சை செய்தன. இருந்தாலும் அதில் பிரான்ஸ் அணிக்கே வெற்றி கிடைத்தது. மொத்த ஆட்ட நேரத்தில் பிரான்ஸ் அணி 55 சதவீதமும், போலாந்து 45 சதவீதமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

பந்தை வலைக்குள் தள்ளுவதில் மிகவும் தீவிரமாக பிரான்ஸ் வீரர்கள் இருந்தனர். முதல் பாதி ஆட்டம் முடிய கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க பிரான்ஸ் வீரர் ஜெராட், தன் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

இரண்டாவது பாதியில் 74 மற்றும் 91-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார் எம்பாப்பே. பின்னர் 99-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் போலந்தின் லெவோண்டஸ்கி. இருந்தாலும் அது அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது.

முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த 2018 ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணிதான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள காலிறுதியில் பிரான்ஸ் அணி விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT