ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதன் மூலம் சுமார் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் குவித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), போப் (108) , ஹேரி ப்ரூக் (101 நாட்-அவுட்) என நான்கு பேரும் சதம் விளாசி இருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 75 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் பவுலர்களின் பந்து வீச்சு எதுவும் கைகொடுக்கவில்லை.
முதல் நாளின் மூன்று செஷனில் 174, 158 மற்றும் 174 ரன்களை இங்கிலாந்து அணி குவித்திருந்தது. அதில் கடைசி செஷனில் குவித்த ரன்கள் வெறும் 21 ஓவர்களில் எடுத்தது இங்கிலாந்து அணி.