கத்தார்: வரலாற்றில் முதல் முறையாக ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பெண் ஒருவர் நடுவராக பங்காற்றுகிறார்.
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்-இ பிரிவில் உள்ள கோஸ்டாரிகா - ஜெர்மனி அணிகள் இன்று (வியாழன்) மோதவுள்ளன. இப்போட்டியில்தான் பிரான்ஸை ஸ்டெபானி ஃப்ராபார்ட் நடுவராக களம் காண்கிறார். ஸ்டெபானி ஃப்ராபார்ட் உடன் அவரது உதவியாளர்களாக நியூசா (பிரேசில்) மற்றும் கரேன் டயஸ் மெதீனா (மெக்சிகோ) ஆகியோரும் துணை நடுவர்களாக இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
38 வயதான ஸ்டெபானி ஃப்ராபார்ட் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் இதற்கு முன்னர் நடுவராக இருந்தவர்.
ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பெண் ஒருவர் நடுவராக பங்கேற்பது குறித்து ஜெர்மனி பயிற்சியாளர் ஹன்சி கூறும்போது, “நான் 100% நம்பிக்கையாக உள்ளேன். அவரது திறனுக்கு அவர் நிச்சயம் தகுதியானவர். நாம் இந்தப் போட்டியை எதிர்நோக்கி கொண்டிருப்பதுபோல் அவரும் எதிர்பார்ப்புடன் இருப்பார் என்று நம்புவோம்” என்றார்.
ஸ்டெபானி ஃப்ராபார்ட் மட்டும் கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை. ருவாண்டாவை சேர்ந்த சலிமா முகன்சங்கா, ஜப்பானை சேர்ந்த யோஷிமி யமாஷிதா ஆகிய இருவரும் பெண் நடுவர்களாக தேர்வாகி உள்ளனர். இவர்கள் இருவரும் வரும் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்பார்கள்.
கத்தார் உலகக் கோப்பையில் பிரான்சின் ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஜப்பானின் யோஷிமி யமாஷிதா, ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா ஆகிய 3 பெண் நடுவர்கள் பணியாற்றுகின்றனர். ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெண் நடுவர்கள் பணியாற்ற உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை. இதுதவிர உதவி நடுவர்கள் குழுவிலும் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.