விளையாட்டு

விஜேந்தர் சிங் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றுமில்லை; நான்தான் உலக சாம்பியன்: தான்சானிய குத்துச்சண்டை வீரர் சவால்

பிடிஐ

வரும் சனிக்கிழமை (டிச.17) அன்று டபிள்யு.பி.ஓ. ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெய்ட் குத்துச் சண்டையில் தான்சானியா வீரர் பிரான்சிஸ் சீகா என்பவரை இந்தியாவின் விஜேந்தர் எதிர்கொள்கிறார். இதன் கடந்த சாம்பியன் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் கெரி ஹோப் என்பவரை வீழ்த்தி விஜேந்தர் இதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் இவரது பட்டத்தைத் தக்கவைக்க விடமாட்டேன் என்று போட்டியாளர் பிரான்சிஸ் சீகா சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில் புதுடெல்லியில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் தான்சானியா குத்துச் சண்டை வீரர் பிரான்சிஸ் சீகா கூறும்போது, “விஜேந்தர் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றுமேயில்லை. நான் உலக சாம்பியன். இண்டர்-காண்டினண்டல் சாம்பியன். டிசம்பர் 17-ம் தேதியன்று நான் ஏன் உலக சாம்பியன் என்பதை விஜேந்தர் அனுபவபூர்வமாக தெரிந்து கொள்வார். என்னிடம் மோத இந்தியா விஜேந்தரைத் தேர்ந்தெடுத்ததை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். அவர் ஏற்கெனவே என்னைக் கண்டு பயந்து போயுள்ளார். சனிக்கிழமையன்று இந்தியா தலைகுனியும்” என்றார்.

இவர் இதனைக் கூறும் போது விஜேந்தர் அருகில்தான் இருந்தார். ஆனால் தனது பதிலில் மிகவும் நிதானமாக இருந்த விஜேந்தர் கூறும்போது, “நானும், எனது டிரெய்னர் லீ பெய்ர்டும் இட்ட உழைப்பின் பலன் டிசம்பர் 17 அன்று தெரியும். எனது எதிராளி யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் 110% தயார். யார் சிறந்தவர் என்று நான் அவருக்குக் காட்டுகிறேன்.

சிங் இஸ் கிங், நான் எப்படி சீகாவை சாய்க்கிறேன் என்பதை அன்று பாருங்கள்” என்றார்.

சீகா உள்நாடு நீங்கலாக அயல்நாடுகளில் அவ்வளவாக போட்டிகளில் வென்றதில்லை, ஆனாலும் அவர் கடும் சவால் விடுத்துள்ளார், விஜேந்தர் மிகவும் நிதானமாக அதற்குப் பதில் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT