ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று கொச்சியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது.
இடதுபுற கார்னர் பகுதியில் இருந்து மெஹ்தாப் ஹொசைன் தூக்கி அடித்த பந்தை கோல்கம்பத்தின் அருகே எதிரணி வீரர்களின் தடுப்பு அரண்களுக்குள் நின்ற முகமது ராபி துள்ளி எழுந்து தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் கேரளா 1-0 என முன்னனிலை வகித்தது.
ஆனால் அடுத்த 7-வது நிமிடத்தில் கொல்கத்தா பதிலடி கொடுத்தது. வலதுபுற கார்னரில் இருந்து சமிஹ் டூட்டி அடித்த பந்தை ஹென்ட்ரிக் செர்னா தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
2-வது பாதியில் இரு அணிகளும் போராடியும் மேற்கொண்டு கோல் ஏதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமி டங்களில் ஆட்டம் 1-1 என சமநிலை யில் இருந்தது. இதையடுத்து ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடங்கள்) சென்றது.
இதிலும் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். முதல் சீசனிலும் அந்த அணி கோப்பை வென்றிருந்தது.