விளையாட்டு

ஆண்டர்சன் தவறு செய்திருந்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்: பாய்காட்

செய்திப்பிரிவு

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக எழுந்துள்ள புகாரில் ஆண்டர்சன் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெஃப் பாய்காட் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆண்டர்சன் தவறு நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அநாகரிகம் நிற்கும். ஆண்டர்சன் என்றில்லை ஆக்ரோஷமாக நடந்து கொள்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.

ஆண்டர்சன் என்ன செய்தார் என்பதை நான் பார்க்கவில்லை. நான் அதைப் பார்க்காமல் விட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவறு செய்திருந்தால் மன்னிப்பு அளிக்கக் கூடாது.

கிரிக்கெட் ஆட்டத்தில் இது போன்ற நடத்தைகளுக்கு என்னைப் பொருத்த வரையில் இடமில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் களத்தில் பேட்ஸ்மென்களுடன் பேசுவது, ஆக்ரோஷம் காட்டுவதில் பெயர் பெற்றவர்தான். இந்த சம்பவத்தில் அவர் என்ன கூறினார் என்பது பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் அவர் எதிரணி வீரர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு கூறிய பாய்காட், வெஸ்ட் இண்டீஸில் இவரை விடவும் ஆக்ரோஷமாக வீசக்கூடிய பவுலர்கள் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் ஒருநாளும் எதிரணி பேட்ஸ்மென்களை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT