முச்சத நாயகன் கருண் நாயர் வரலாறு படைக்க இந்திய அணியின் ஸ்கோர் 759 என்று புதிய சாதனையில் திளைக்க, கேட்ச்களைக் கோட்டவிட்டதால் 500 ரன்களை கூடுதலாக கொடுக்க நேர்ந்ததாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் சாடியுள்ளார்.
“எங்களது கேட்சிங் மிகவும் தரக்குறைவாக உள்ளது, கடைசி 3 கேட்ச்களை விட்டதால் 500 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளோம், இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதிலிருந்து மீண்டெழ தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. எங்கள் அணியில் இயல்பாக நன்றாக ஓடும் வீரர்கள் இல்லை.
நல்ல கிரிகெட் வீரர்கள் உள்ளனர், ஆனால் தரமான ஸ்லிப் பீல்டர்கள் இல்லை. களத்தில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது.
வீரர்களுக்கு இது போன்ற தினம் அமைவது புதிதல்ல, இதுவே கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை
ஆனால் இப்படியொரு தினம் அமைந்தால் அது உண்மையில் கடினமே. இந்திய அணிக்கும் அதன் பேட்ஸ்மென்களுக்கும் நாம் உரிய அங்கீகாரம் அளித்தேயாக வேண்டும், அவர்கள் மிக அருமையாக ஆடுகின்றனர். நாங்கள் இன்று ஆட்டத்தில் இல்லை.
இந்தத் தொடரிலேயே நல்ல பேட்டிங் பிட்ச் ஆகும் சென்னை. சில வேளைகளில் கேப்டன் அமைத்த களவியூகத்திற்கு ஏற்ப பந்து வீச்சு இருப்பதில்லை. இதுதான் சூழலை கடினமாக்குகிறது
இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மென்கள் உள்ளனர், நிச்சயமாக ஸ்பின்னை அருமையாகவே ஆடுகின்றனர். உள்நாட்டில் அவர்கள் எதிரணிக்கு அதிக கஷ்டம் கொடுப்பார்கள் அதைத்தான் இன்று பார்த்தோம்.
கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் அதாவது வங்கதேசத்தில் 2 உட்பட வீரர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. முயற்சி திருவினையாகவில்லை.
இந்தத் தொடரில் எங்களை இந்திய அணியின் அடித்து நொறுக்கி விட்டனர். எங்களை விட இந்திய அணி நன்றாக பேட், பவுல் செய்தது. துணைக்கண்டத்தில் தடுமாறும் முதல் அணியல்ல நாங்கள், தடுமாறும் கடைசி அணியும் அல்ல.
கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இளைஞர்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தோம். எனவே இந்த அனுபவத்திலிருந்து இவர்கள் பயன் பெறுவார்கள். இந்திய வீரர்களிடமிருந்தே சிறிது கற்றுக் கொள்ளலாம்
நாளை டிராவுக்கு ஆடுவோம், விமானத்தில் தோல்வியுடன் ஏறமாட்டோம்.
அலிஸ்டர் குக் கேப்டன்சி பற்றி அவரிடம் இன்னமும் பேசவில்லை. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் இது குறித்து அவரிடம் பேசமாட்டேன். இதை அவரே முடிவெடுப்பார். இதில் நான் கூறுவதால் அவர் மனம் மாறப்போவதில்லை
தொடர்ந்து கேப்டனாக இருப்பாரா, அல்லது இல்லையா என்பது அவரைப்பொறுத்தது எனக்கு அதனால் ஒன்றுமில்லை” என்றார் டிரவர் பெய்லிஸ்.