ஜெய்பூரில் ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி காலிறுதிப் போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சமித் கோஹல் அரிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தொடக்க வீரராகக் களமிறங்கி 359 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் சமித் கோஹல் என்ற குஜராத் வீரர்.
சமித் கோஹல் குஜராத் அணியின் 2-வது இன்னிங்ஸில் தொடக்கத்தில் களமிறங்கி 964 நிமிடங்கள் நின்று 723 பந்துகளைச் சந்தித்து 45 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 359 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வரலாறு படைத்தார்.
அதாவது, 1899-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்காக ஆடிய பாபி ஆபெல் என்ற வீரர் சோமர்செட் அணிக்கு எதிராக தொடக்கத்தில் இறங்கி 357 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்தார், அந்த சாதனை தற்போது சமித் கோஹல் வசம் வந்துள்ளது.
கடைசி விக்கெட்டுக்காக கோஹலும் ஹர்திக் படேலும் 72 ரன்களைச் சேர்த்த பிறகு படேல், தீரஜ் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் கோஹல் 359 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால் 117 ஆண்டுகள் சாதனையை தான் முறியடித்ததை அவர் அறிந்திருக்கவில்லை.
நடப்பு ரஞ்சி சீசனில் முச்சதம் அடித்த 2-வது வீரரானார் சமித் கோஹல். முன்னதாக மற்றொரு தொடக்க வீரர் பி.கே.பஞ்ச்சல் முச்சதம் கண்டார்.