குரோஷிய வீரர்கள் 
விளையாட்டு

FIFA WC 2022 | முத்தான நான்கு கோல்: கனடாவை வீழ்த்தியது குரோஷியா

செய்திப்பிரிவு

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது குரோஷியா. இந்த வெற்றியின் மூலம் ‘எஃப்’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது அந்த அணி. இந்த போட்டி தொடங்கிய 120 நொடிகளுக்குள் முதல் கோலை பதிவு செய்தது கனடா. ஆனால் நேர்த்தியாக விளையாடி ஆட்டத்தை வென்றது லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியா.

குரூப் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்தது. நெருக்கடியான இந்த போட்டியில் பதட்டமின்றி கிளாஸ் ஆக விளையாடி அசத்தி இருந்தது குரோஷியா. ஷாட் ஆடுவதிலும், அதனை டார்கெட்டில் அடிப்பதுமாக அசத்தினர் குரோஷிய வீரர்கள்.

36 மற்றும் 70-வது நிமிடத்தில் கிராமரிக், இரண்டு கோல்களை பதிவு செய்தார். 44-வது நிமிடத்தில் மார்கோ லிவாஜா மற்றும் கூடுதல் நேரத்தில் 4-வது நிமிடத்தில் லோவ்ரோவும் கோல் போட்டு அசத்தி இருந்தனர். அதிலும் கூடுதல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த கோல் ஆட்டத்தின் ஹைலைட். எந்தவித அழுத்தமும் இன்றி கனடா பாக்ஸுக்குள் இரண்டு குரோஷிய வீரர்கள் மட்டுமே புகுந்த போட்ட கோல் அது.

இந்த போட்டியில் குரோஷியா வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு உயிர்ப்புடன் உள்ளது. கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்திருந்தது குரோஷியா.

SCROLL FOR NEXT