தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை அப்செட் செய்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தனது தாயுடன் கொண்டாடி மகிழ்ந்தார் மொராக்கோ வீரர் அக்ரஃப் ஹக்கிமி.
குரூப் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்த போட்டி அல்-துமானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடமும், ஃபிஃபா சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ள பெல்ஜியம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொராக்கோ அணியுடனான போட்டியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சாஸ், 73-வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் சக்காரியா மேலும் ஒரு கோல் போட மொராக்கோ அணி கெத்தாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் வீரர் அக்ரஃப் ஹக்கிமி, தனது தாயுடன் வெற்றியை கொண்டாடி இருந்தார். அந்த படம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ உலகக் கோப்பை அரங்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றுள்ள முதல் வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் ‘எஃப்’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது அந்த அணி. மறுபக்கம் தோல்வியை தழுவிய பெல்ஜியம் அணி வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்.