மும்பை டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று பார்த்திவ் படேல் இங்கிலாந்து ஸ்பின்னர்களின் திறமை குறைவை விமர்சித்தார். ஆனால் இன்று பகுதி நேர பவுலர் ஜோ ரூட்டிடம் ஆட்டமிழந்துள்ளார்.
“பிட்சை விட பந்துவீச்சின் தரம் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்றே கூறுவேன், இங்கிலாந்து ஸ்பின்னர்களை நம் ஸ்பின்னர்கள் பந்துகளை அதிகம் சுழலச்செய்து திருப்புகின்றனர்.
நமது பவுலர்கள் பிட்ச் உதவுவதற்காக காத்திருப்பதில்லை, காற்றில் பந்தை தூக்கி வீசுவதிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் கணிப்பை ஏமாற்றிவிடுகின்றனர். நிச்சயமாக நம் ஸ்பின்னர்கள் தரத்திற்கும் அவர்கள் ஸ்பின்னர்கள் தரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. மொஹாலியில் அவர்கள் ஸ்பின் பவுலிங்கின் தரம் அம்பலப்படுத்தப்பட்டது. நாங்கள் அவர்கள் ஸ்பின்னர்களை இறங்கி வந்து ஆடவோ, தூக்கி அடிக்கவோ தேவையில்லை, நிச்சயம் ஒரு மோசமான பந்து வரும் என்று உறுதியாக இருக்கலாம்” என்றார்.
இன்று மும்பை டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள், இதில் கோலி தவிர மற்றவர்களின் பேட்டிங் இங்கிலாந்து ஸ்பின்னர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது.
குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்களை திறமை குறைவானவர்கள் என்று விமர்சித்த பார்த்திவ் படேல் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வகைப்படுத்திய ‘திறமை குறைவான’ மொயின் அலி, அடில் ரஷீத்திடம் ஆட்டமிழந்திருந்தால் கூட பரவாயில்லை எனலாம், ஆனால் ஜோ ரூட் என்ற பகுதி நேர பவுலரின் பந்தில் ஆட்டமிழந்தார் பார்த்திவ் படேல்.
நன்றாக தூக்கி வீசப்பட்ட ரூட்டின் பந்து படேலை முன்னால் வந்து ஆட அழைத்தது, வந்து ஆடினார் பந்து திரும்பி எழும்பியது, எட்ஜ் எடுத்தது, மார்புயர கேட்சை பேர்ஸ்டோ பிடித்துப் போட்டார். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப அமைந்தது பார்த்திவ் படேல் பேச்சும் அவர் ஆட்டமிழந்ததும்.
இதோடு மட்டுமல்லாமல் ஜோ ரூட், ஆல்ரவுண்டர் அஸ்வினையும் டக் அவுட் ஆக்கினார். கடைசியாக ஜடேஜாவும் 25 ரன்களில் ஆட்டமிழக்க கோலி ஒருமுனையில் சுவராக நின்று 96 ரன்களில் ஆடி வருகிறார், இந்தியா 364/7.