நடப்பு உலகக் கோப்பையில் விளையாடப்படும் பந்துகள்
ஃபிஃபா உலகக் கோப்பை தொடருக்கான கால்பந்துகளை தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி வருகிறது பாகிஸ்தான். இது அந்த நாட்டின் விளையாட்டு பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 35 முதல் 50 சதவீத வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறதாம். அந்த பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
சர்வதேச கால்பந்து அணிகளுக்கு இடையிலான ஃபிஃபா தரவரிசையில் பாகிஸ்தான் அணி 195-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பையிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் உலகத் தரமான கால்பந்துகளை தயாரித்து வருகிறது. இந்தப் பணியை கடந்த 20-ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தின் போது தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஒவ்வொரு தீமில் பந்துகள் உருவாக்கப்படும். அதனை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான போட்டி பந்துகள் ‘அல் ரஹ்ல’ என அரபு மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பயணம் என்பது பொருளாகும். இதனை இப்போது தயாரித்து வழங்கி உள்ளது.
பாகிஸ்தானும் கால்பந்து தயாரிப்பு பணியும்:
- பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியான சியால்கோட் பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் பஞ்சர் ஆன தனது கால்பந்தை சரி செய்து கொடுக்குமாறு குதிரை சேணம் மேற்கொள்ளும் நபரிடம் கொடுத்துள்ளார். அவரும் அதனை செய்து கொடுத்துள்ளார். அவரது சிறப்பான பணியை கவனித்த அதிகாரி புதிதாக தனக்கு பந்துகளை உருவாக்கிக் கொடுக்குமாறு சொல்லி உள்ளார். அப்படித்தான் 19-ம் நூற்றாண்டில் கால்பந்து தயாரிக்கும் பணிகள் அங்கு தொடங்கி உள்ளன.
- இன்றைய பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இந்திய நாட்டின் எல்லைக்கு மிக அருகில் சியால்கோட் அமைந்துள்ளது. இந்தப் பகுதிதான் உலக அளவில் கால்பந்து தயாரிப்புக்காக பிரபலமானதாக அறியப்படுகிறது.
- கடந்த 1982 வாக்கில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாட பயன்படுத்தப்பட்ட பந்துகளை சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் பட்டறைகள் தயாரித்துக் கொடுத்துள்ளன.
- அப்படியே 1990 மற்றும் 2000 என அது தொடர்ந்துள்ளது. 2014-க்கு முன்னர் வரையில் கைகளால் பந்துகள் தைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அடிடாஸ் நிறுவனத்துடன் இணைந்து தெர்மோ பாண்டட் முறையில் பந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இந்தப் பணியை சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் ஃபார்வேர்டு ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் செய்து வருகிறது.
- “உலகக் கோப்பை தொடருக்கான பந்துகளை மீண்டும் வழங்க நாங்கள் தேர்வானது எங்களுக்கு கிடைத்த கவுரவம். எங்கள் தயாரிப்பில் நாங்கள் கடைபிடித்து வரும் தரத்திற்கான சான்று இது” என அந்நிறுவனத்தின் தலைவர் கவாஜா மசூத் அக்தர் தெரிவித்துள்ளார்.
- இந்த நிறுவனம்தான் 2014 மற்றும் 2018 உலகக் கோப்பை தொடருக்கான பந்துகளை வழங்கியுள்ளது.