விளையாட்டு

நான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ரா: மனம் திறக்கும் ராகுல் திராவிட்

இரா.முத்துக்குமார்

இந்தியாவின் ‘சுவராக’ திகழ்ந்த ராகுல் திராவிட் தான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்தவர் கிளென் மெக்ராதான் என்று மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பையில் ‘லிங்க் சொற்பொழிவு வரிசை’யில் நேற்று உரையாற்றிய ராகுல் திராவிட் கூறியதாவது:

என் தலைமுறையில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இவர்கள் அனைவரிலும் நான் எதிர்கொண்ட மகா பவுலர், கிரேட் ஆஸ்திரேலிய பவுலர் மட்டுமல்லாது நான் எதிர்கொண்ட பவுலர்களில் மிகச்சிறந்த பவுலர் என்றால் அது கிளென் மெக்ரா அல்லாது வேறு யாராக இருக்க முடியும்.

கிளென் மெக்ரா மிக அருமையான பந்து வீச்சாளர், எனது ஆஃப் ஸ்டம்ப் பற்றிய கவனத்தை அவரைப்போன்று கேள்விக்குட்படுத்தியவர்கள் யாருமில்லை. அவர் ஓய்வு ஒழிச்சலில்லாமல் நம்மை கடுமையாக சோதிப்பவர். எதையும் விட்டுக் கொடுக்காதவர்.

டெஸ்ட் போட்டியில் காலையில் வீசினாலும் சரி, மதியம், மாலை வேளை என்று எந்த நேரமாக இருந்தாலும் அவர் எதையும் உங்களுக்கு எளிதாக விட்டுக் கொடுத்து விடமாட்டார். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் துல்லியமாக வீசுவதில் அவரைப் போன்ற ஒருபவுலரை நான் எதிர்கொண்டதில்லை.

பேட் செய்யும் போது இவரது பந்து வீச்சில் அடுத்த ரன் எங்கிருந்து வரும் என்று பேட்ஸ்மென்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர். அந்த அளவுக்கு துல்லியம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டவர்.

அவரது பந்துவீச்சில் உள்ள நல்ல வேகம், பந்தை எழுப்பும் திறமை, ஆட்டத்தை நன்றாக கணிக்கும் திறமை என்று நான் எதிர்கொண்டதிலேயே ஆகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ராதான்.

இவ்வாறு கூறினார் திராவிட்.

SCROLL FOR NEXT