ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் முதல் தர கிரிக்கெட் போட்டியில் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கெய்ர்ன்ஸ் மைதானத்தில் இன்று முடிவடைந்த பகலிரவு ஆட்டமான இந்த முதல்தர போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கியதன் முலம் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிக்குப் பாகிஸ்தான் தயாராகியுள்ளது.
பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 208 ரன்களுக்குச் சுருண்டது. யூனிஸ் கான் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தா. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் வாலண்ட் 4 விக்கெட்டுகளையும் ஸ்டெகீட்டி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா 114 ரன்களுக்குச் சுருண்டது கேப்டன் போசிஸ்டோ உட்பட முதல் 3 பேர் டக் அவுட். பாகிஸ்தான் தரப்பில் ஆமிர், ரஹத் அலி, வயாப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அசார் அலியின் அபாரமான 82 ரன்களுடன் 216/6 என்று டிக்ளேர் செய்தது. 311 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸில் 27.3 ஓவர்களில் 109 ரன்களுக்குச் சுருண்டு 201 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் 3 விக்கெட்டுகளையும், ஆமிர், ரஹத் அலி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி குறித்து அசார் அலி கூறும்போது, “அனைவருக்கும் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது, இது மிக முக்கியம். ரன்கள் எடுப்பது வேறொரு விஷயம் என்றாலும் பிட்சில் சிறிது நேரம் நின்று ஆடி பிங்க் பந்தில் இந்த பிட்ச்களில் ஆடிப்பழகுவது என்பது மற்றொரு விஷயம், இந்த விதத்தில் இந்த வெற்றி தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஒரு அணியாக முன்னேறுவதற்கு விரும்புகிறோம், பீல்டிங் மிக மிக முக்கியமானது, கேட்ச்களை பிடிப்பது மட்டுமே டெஸ்ட் போட்டியில் வெற்றியைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து கொண்டு அதற்காக பயிற்சி பெற்று வருகிறோம்” என்றார்.
முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.