தோஹா: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘பி’ சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் 12-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கோல் கீப்பர் அலிரேசா பெய்ரன்வன்ட் காயம் அடைந்தார். ரத்தம் சிந்திய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார் அவர்.
கடந்த 2018 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது இங்கிலாந்து அணி. இந்த முறை அதையும் கடந்து செல்ல வேண்டுமென்ற நோக்கில் அந்த அணி களம் இறங்கியுள்ளது.
இந்தப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் பாதியின் 12-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கோல் கீப்பர் அலிரேசா மற்றும் தடுப்பாட்டக்காரர் மஜித் ஹொசைனியும் எதிர்பாராத விதமாக ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். அதன் காரணமாக அலிரேசாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் சிந்திய நிலையில் சில நிமிடங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் விளையாட முயன்றார். ஆனாலும் Concussion சந்தேகத்தில் வெளியேறினார்.
அதன்பின்னர் 35, 43 மற்றும் 46-வது நிமிடத்தில் மூன்று கோல்களை பதிவு செய்தது இங்கிலாந்து. ஜூட், சாக்கா மற்றும் ஸ்டெர்லிங் ஆகியோர் இங்கிலாந்து அணி சார்பில் கோல் பதிவு செய்துள்ளனர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 3 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் வீரர்கள்: உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் போட்டியில் விளையாடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கம். அதன்படி இங்கிலாந்து - ஈரான் போட்டியில் இரு நாடுகளில் தேசிய கீதமும் ஒலித்தது. ஆனால் தங்கள் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தை பாட மறுத்தனர் ஈரான் வீரர்கள். அவர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது அதை கேட்டுக்கொண்டு நின்றனர்.