நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 36 ரன்களைச் சேர்த்தார்.
ரிஷப் பண்ட் (6), ஷ்ரேயாஸ் ஐயர் (13), பாண்ட்யா (13) ரன்களில் விக்கெட்டாகி வெளியேறினர். தீபக் ஹூடா, வாஷிங்கடன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதமடிக்க இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தேவன் கான்வே 25 ரன்களுடனும், க்ளான் பிலிப்ஸ், மிட்சல் முறையே 12, 10 ரன்களுடன் நடையைக்கட்டினர்.
ஒருபுறம் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடி ரன்களைச் சேர்க்க, மறுபுறம் வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களைக்கூட சேர்க்க முடியாமல் தடுமாறினர். வருவதும் போவதுமாக இருந்த வீரர்களில் ஜேம்ஸ் நிஷாம், டிம் சவுதி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் கேன் வில்லியம்சன் 61 ரன்களில் அவுட்டாக, மொத்த அணியின் பலமும் குன்றியது. 18-வது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்திருந்த அந்த அணி, 18வது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைக் கண்டது. இதனால் 18.5 வது ஓவரில் அனைத்துவிக்கெட்டையும் இழந்த நியூசிலாந்து 126 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், முஹம்மத் சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.