இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஆட்டத்தில் கிரிக்கெட் வல்லுநராக கலந்து கொண்டு தன் கருத்துகளை பகிர்வார் எனத் தெரிகிறது. அவர் தனியார் வலைதளம் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இதனைச் சொல்ல உள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான அறிவிப்பை அந்த வலைதளம் வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார். இந்தத் தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடி இருந்தார். அவருக்கு நியூஸிலாந்து தொடரில் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் அவர் வலைதளம் மூலம் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் விளையாடும் முதல் டி20 போட்டி குறித்து கிரிக்கெட் வல்லுநராக தனது கருத்துகளை பகிர உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் வர்ணனையாளராக செயல்பட்டிருந்தார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கான இடத்தை தினேஷ் கார்த்திக் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.