இணைந்த கைகள்…: 2002-ம் ஆண்டு உலகக் கோப்பை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளால் இணைந்து நடத்தப்பட்ட முதல் போட்டியாகும்.
ஆரம்பத்தில், தென் கொரியா, ஜப்பான் இரண்டும் தனித்தனியாக போட்டியை நடத்த உரிமை கோரின. மேலும் போட்டியை இணைந்து நடத்தும் யோசனையை ஜப்பான் முதலில் நிராகரித்தது. இருப்பினும் அதன் பின்னர் ஜப்பான் மனதை மாற்றிக்கொண்டு தென் கொரியாவுடன் இணைந்து வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்தது.
வயதான கோல் கீப்பர்..: உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையை எகிப்தின் எஸ்ஸாம் எல் ஹடாரி பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கோல்கீப்பரான எஸ்ஸாம் எல் ஹடாரி 45 வயதில் விளையாடினார். சவுதி அரேபியாவுக்கு எதிரான பெனால்டி ஷாட்டை அவர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் பெனால்டி ஷாட்டில் கோல் விழ விடாமல் தடுத்த மூத்த வீரர் என்ற விருதையும் அவர் பெற்றார்.
கோப்பையை தேடிக்கொடுத்த ‘பிக்கிள்ஸ்’: 1966-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள மெதடிஸ்ட் சென்ட்ரல் ஹாலில் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது. ஒரு திருடன் மர்மமான முறையில் பாதுகாப்பை மீறி கோப்பையுடன் தப்பிச் சென்றான். பின்னர் அது ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள புதருக்கு அடியில் கிடந்ததை பிக்கிள்ஸ் என்ற நாய் கண்டுபிடித்தது.