இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியாவின் ஸ்கோரை விட வெறும் 22 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி நாளின் 2-வது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா பேட்டியை வீழ்த்தினார். தொடர்ந்து வந்த பட்லர், தான் சந்தித்த 7வது பந்தை சிக்ஸருக்கு விரட்டி தன் ரன் சேர்ப்பை அதிரடியாக துவக்கினார். ஆனால் அவர் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. 18 ரன்களுக்கு ஜயந்த் யாதவ் சுழலில் சிக்கி கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, இங்கிலாந்தின் துவக்க வீரராக களமிறங்க வேண்டிய ஹமீது ஆட வந்தார். காயம் காரணமாக இவர் முதலில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மட்டுமே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்து வந்தார். 147 பந்துகளில் அவர் அரை சதம் கடந்தார்.
இந்தியாவின் முன்னிலை ரன்களை ஒரு கட்டத்தில் இங்கிலாந்து கடக்க, ஜோ ரூட் விக்கெட்டை எடுத்தால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படும் என்ற நிலை உருவானது. உணவு இடைவேளைக்கு ஒரு சில ஓவர்கள் மீதம் இருக்கும்போது அந்த திருப்புமுனை நிகழ்ந்தது. ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து 78 ரன்களுக்கு ரூட் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியாவை விட 22 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும், 3 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருப்பதால் இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.