விளையாட்டு

புஜாரா, ஸ்டூவர்ட் பின்னி அபாரம்; இந்தியா 341/6 டிக்ளேர்

செய்திப்பிரிவு

டெர்பிஷயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாளான நேற்று இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் டெர்பிஷயர் அணியைக் காட்டிலும் 15 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

நேற்று பேட்டிங்கைத் துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினர். இதில் முரளி விஜய், தவான் இருவரும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முரளி விஜய் எல்.பி.டபிள்யூ என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் பந்து மட்டையில் பட்டது என்று அவர் மட்டையைக் காண்பித்து திருப்தியில்லாமல் பெவிலியன் திரும்பினார்.

தவான் கேட்ச் கொடுத்து வெளியேறும் முன் இருமுறை ஆஃப் ஸ்டம்ப் பந்தில் பீட் ஆனார். புஜாராவும் கோலியும் 3வது விக்கெட்டுக்காக 63 ரன்களைச் சேர்த்தனர். கோலி 91 பந்துகள் நின்றார் 5 பவுண்டரிகளுடன் அவர் 36 ரன்கள் எடுத்து பென் காட்டன் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் பவுல்டு ஆனார்.

புஜாரா அபாரமாக ஆடினார். அவர் மிட் ஆன், மிட் ஆஃப் திசைகளில் ஆடிய ஷாட்கள் அவரது தன்னம்பிக்கையைக் காட்டியது. அவர் 131 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து மற்றவர்கள் ஆடுவதற்காக ரிட்டையர்ட் ஆகிச் சென்றார்.

புஜாராவும் தோனியும் 4வது விக்கெட்டுக்காக 119 ரன்களைச் சேர்த்தனர். தோனி பந்துகள் ஸ்விங் ஆவதை முறியடிக்க மேலேறி வந்து ஆடி தனது ஆக்ரோஷ நோக்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாட் பிட்ச் பந்துகளை வீசத் தொடங்கினர். அவர்களை தொடர்ந்து புல் மற்றும் ஹுக் ஆடினார் தோனி. 56 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 46 ரன்கள் எடுத்து வெய்ன்ரைட் என்பவர் பந்தில் பவுல்டு ஆனார்.

ஜடேஜாவும் பின்னியும் இணைந்தனர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 88 ரன்களைச் சேர்த்தனர். ஜடேஜா 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து வெய்ன்ரைட் பந்தில் அவுட் ஆனார்.

ஸ்டூவர்ட் பின்னி 111 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. துவக்கத்தில் சற்றே தடுமாறினாலும் பிறகு அனாயசமாக சில ஷாட்களை ஆடி பின்னி அசத்தினார்.

SCROLL FOR NEXT