சரத் கமல் | கோப்புப்படம் 
விளையாட்டு

தமிழக வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா; பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

Ellusamy Karthik

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022 தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவரும் அனுபவ டேபிள் டென்னிஸ் வீரருமான சரத் கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை வரும் 30-ம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து அவர் பெற உள்ளார்.

இவருடன் 25 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது, பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சரத் கமல்?

40 வயதான சரத் கமல் சென்னையில் பிறந்தவர். தொழில்முறை டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர். 10 முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். சர்வதேச ஆடவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ளார். 4 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவரது தந்தை மற்றும் உறவினரும் இணைந்து அவருக்கு இந்த விளையாட்டில் பால பாடத்தை பயிற்று வித்துள்ளனர்.

16 வயதில் தொழில்முறையாக விளையாட தொடங்கி உள்ளார். அப்படியே அது மாநிலம், தேசம் மற்றும் சர்வதேச அளவு வரை சென்றுள்ளது. 2003 வாக்கில் இந்தியா சார்பில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் காமன்வெல்த், ஒலிம்பிக் உட்பட சர்வதேச அளவில் அவர் விளையாடி வருகிறார்.

காமன்வெல்தில் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலமும் வென்றுள்ளார்.

விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து சரத் கமல்: “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நான் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த முறை விருது பெறுவது நான் மட்டும்தான் என்பது இன்பமான அதிர்ச்சி. இந்த கவுரவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் முற்றிலும் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு தமிழக வீரரும், சதுரங்க விளையாட்டு வீரருமான பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: “பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022-இல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அசந்தா சரத்கமல் அவர்கள் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

அர்ஜுனா விருது-க்குத் தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்!

பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த - 17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அர்ஜுனா விருது 2022-க்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே இத்தகைய அங்கீகாரம் பெற்றுள்ள அவருக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT