விராட் கோலி | கோப்புப்படம் 
விளையாட்டு

ஆஸி.யில் இருந்து ஏமாற்றத்துடன் செல்கிறோம்: கோலி உருக்கம்

செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இது குறித்து தனது மன ஓட்டத்தை சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் அவர் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் மிக முக்கிய போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் அவர். அதோடு இந்தத் தொடரில் பல்வேறு சாதனைகளையும் அவர் செய்துள்ளார். இருந்தாலும் இந்திய ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை அவரால் மெய்பிக்க முடியவில்லை.

“ஆஸ்திரேலிய கரையிலிருந்து எங்கள் கனவை அடைய முடியாமல், எங்கள் இதயங்களில் ஏமாற்றத்தை சுமந்து கொண்டு செல்கிறோம். ஆனாலும், ஓர் அணியாக சில மறக்க முடியாத தருணங்களை பெற்றுள்ளோம். இங்கிருந்து சிறப்பாக செயல்படுவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த உலகக் கோப்பை தொடர் வரும் 2024 வாக்கில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது இந்தியா.

SCROLL FOR NEXT