தோனி | கோப்புப்படம் 
விளையாட்டு

மிஸ் யூ கேப்டன் தோனி! - இந்திய அணியின் T20 WC அரையிறுதி தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் சோபிக்காத வீரர்களை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சிலரோ ‘இந்நேரம் தோனி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?’ என முன்னாள் கேப்டன் தோனியின் புகழை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக் கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். அது வரலாறு.

மொத்தம் 9 ஐசிசி தொடர்களில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி இந்த 3 வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இப்போது அவரை தான் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்திய அணி வென்றுள்ள 5 ஐசிசி தொடர்களில் மூன்றில் தோனி தான் கேப்டன்.

தோனி குறித்து இப்போது ரசிகர்கள் பகிர்ந்துள்ள சில சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ள கருத்துகள்..

  • தோனி ஓரியவவுக்கு விளம்பர செய்த போது ஒன்றை மறந்துவிட்டார். அது அணியில் அவர் இல்லை என்பதுதான்.
  • இந்திய அணி தோற்கும் போதெல்லாம் நம் நினைவலைகளில் வரும் ஒரே வீரர் தோனி.
  • தோனிக்கு மாற்று என யாருமே இல்லை சார்.
  • இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் களத்தில் தோனியை அதிகம் மிஸ் செய்கிறோம்.
  • கோப்பை வெல்வது எல்லாம் ஒரு கலை.
  • 130 கோடி மக்கள் தோனியை மிஸ் செய்கிறார்கள்.

இப்படியாக தோனி குறித்த பதிவுகள் நீள்கின்றன. கடந்த 2019 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அதன் பிறகு அவர் ஓய்வை அறிவித்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

SCROLL FOR NEXT