விராட் கோலி | கோப்புப்படம் 
விளையாட்டு

T20 WC | பேட்டிங் பயிற்சியின்போது காயம் அடைந்து மீண்டும் களத்துக்குத் திரும்பிய கோலி

செய்திப்பிரிவு

அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, பேட்டிங் பயிற்சி மேற்கொண்டபோது காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் சிறிய இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேல் வீசிய பந்து கோலியை பதம் பார்த்துள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு காயம் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நேற்று, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சி செய்தபோது காயம் அடைந்தார். ஆனாலும் அவர் களத்திற்கு திரும்பியிருந்தார். இன்று விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வலைப்பயிற்சியில் ஹர்ஷல் படேல் வீசிய பந்து கோலியை தாக்கி உள்ளது. அவருக்கு பெருவிரல் அல்லது இடுப்புக்கு கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆனாலும் சில நிமிட இடைவேளைக்கு பிறகு அவர் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ஏனெனில், அது லேசான காயம்தான் என சொல்லப்படுகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடி 246 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார் கோலி. அவர் அணியில் இருப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்.

SCROLL FOR NEXT