நடப்பு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. வரும் வியாழன் அன்று இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், ‘லகான்’ திரைப்படத்தை இந்தப் போட்டியுடன் ஒப்பிட்டு மீம்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
சூப்பர் 12 குரூப்-2 பிரவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், சூப்பர் 12 குரூப்-1 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் நேருக்கு நேர் விளையாடுகின்றன. இரண்டு அணிகளிலும் ஆட்டத்தை தங்கள் அணிக்காக வென்று கொடுக்கும் மேட்ச் வின்னர்கள் அதிகம். இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தை விராட் கோலியின் ‘பேட்டை’ என சொல்லலாம். அதோடு ஐசிசி டி20 உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் 2014 அரையிறுதி 72 ரன்கள், 2014 இறுதிப் போட்டி 77 ரன்கள் மற்றும் 2016 அரையிறுதி 89 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.
இந்தப் புள்ளி விவரங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது அவரது பேட்டில் இருந்து மீண்டும் ஓர் அற்புதமான இன்னிங்ஸை ஆட அதிக வாய்ப்பு உள்ளது. தொடரில் அதிக ரன் குவித்த வீரரும் அவரேதான். மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி கொண்டுள்ளார். கே.எல்.ராகுல் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசி உள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சும் செம ஸ்ட்ராங்காக உள்ளது. இப்படி இருக்க இந்தப் போட்டியை ‘லகான்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு மீம் போட்டு வருகின்றனர்.
லகான்: கடந்த 2001 வாக்கில் வெளியான இந்தி மொழி ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் தான் லகான். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அன்றைய இந்தியாவில் வரி விலக்கு வேண்டி பிரிட்டிஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும். இதில் இந்திய அணி வெற்றி பெறும். அமீர் கான் கதாநாயகனாக நடித்த படம். மக்களை கவர்ந்ததோடு பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.
இப்போது அந்தப் படத்துடன் தான் ரசிகர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியை ஒப்பிட்டு வருகின்றனர். இது உணர்ச்சிபூர்வமான இணைப்பாகவும் அமைந்துள்ளது. ரசிகரள் மீம்ஸ் மூலம் தெரிவித்துள்ள கருத்துகள் சில.