ஜோஷ் லிட்டில் 
விளையாட்டு

T20 WC | நியூஸிலாந்துக்கு எதிராக ஹாட்-ட்ரிக் வீழ்த்திய அயர்லாந்து வீரர் லிட்டில்

செய்திப்பிரிவு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில். நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக ஒரு பவுலர் ஹாட்-ட்ரிக் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அயர்லாந்து அணி சார்பில் டி20 உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் கைப்பற்றிய இரண்டாவது பவுலராகவும் அவர் உள்ளார்.

அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து அணி விரட்டி வருகிறது. முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 19-வது ஓவரில் லிட்டில் அபாரமாக பந்து வீசி நியூஸிலாந்து அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான வில்லியம்சன், நீஷம் மற்றும் சான்ட்னர் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி இருந்தார்.

4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 பவுலர்கள் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

  • பிரெட் லீ - ஆஸ்திரேலியா - 2007
  • கேம்பர் - அயர்லாந்து - 2021
  • ஹஸரங்கா - இலங்கை - 2021
  • ரபாடா - தென் ஆப்பிரிக்கா - 2021
  • கார்த்திக் மெய்யப்பன் - ஐக்கிய அரபு அமீரகம் - 2022
  • ஜோஷ் லிட்டில் - அயர்லாந்து - 2022
SCROLL FOR NEXT