விளையாட்டு

T20 WC | ஃபீல்டிங்கில் ஏமாற்றினாரா விராட் கோலி?

செய்திப்பிரிவு

அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் அக்சர் படேல் வீசிய 7-வது ஓவரின்போது லிட்டன் தாஸ் அடித்த ஷாட்டை டீப் திசையில் ஃபீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங், விக்கெட் கீப்பரை நோக்கி பந்தை வீசினார்.

அப்போது பந்து, பாயிண்ட் திசையில் நின்ற விராட் கோலியின் அருகே சென்றது. ஆனால் பந்தை விராட் கோலி பிடிக்காமலேயே, வேகமாக நான் ஸ்டிரைக்கர் திசையில் உள்ள ஸ்டம்ப் நோக்கி வீசுவது போல சைகை காண்பித்தார்.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி இதுபோன்று போலி ஃபீல்டிங்கினால் பேட்ஸ்மேன்களின் கவனம் சிதறினால் அதற்கு 5 ரன்கள் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் விராட் கோலியின் செயலை களத்தில் நின்ற பேட்ஸ்மேன்களான ஷான்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் கவனிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் கண்டுகொள்ளாத நிலையில் களநடுவர்களான கிறிஸ்பிரவுன், மரைஸ் எராஸ்மஸ் ஆகியோரும் இதை பொருட்படுத்தவில்லை.

ஒருவேளை விராட் கோலியின் போலி ஃபீல்டிங்கிற்கு கள நடுவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் 5 ரன்களை அபராதம் விதித்திருப்பார்கள். துரதிருஷ்டவசமாக இதே அளவிலான ரன்கள் எண்ணிக்கையில்தான் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இதனை ஆட்டம் முடிவடைந்ததும் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நூருல் ஹசன் சுட்டிக்காட்டினார்.

ஐசிசி விதி 41.5-ன் படி ஃபீல்டிங் செய்யும் வீரர் பேட்ஸ்மேனுக்கு கவனச் சிதறல் ஏற்படுத்துவதை நடுவர் கண்டறிந்தால், அவர் அதை ‘டெட் பால்’ என்று கூறி 5 ரன்களை அபராதமாக விதிக்கலாம்.

ஷான்டோவோ, லிட்டன் தாஸோ, விராட் கோலியின் செயலை பார்க்கவில்லை, எனவே, அவர்கள் திசைதிருப்பப்படவும் இல்லை, ஏமாற்றப்படவும் இல்லை. இதனால் நூருல் ஹசனின் குற்றச்சாட்டு விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. மாறாக நடுவர்களை மறைமுகமாக விமர்சித்ததற்காக நூருல் ஹசன் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்.

SCROLL FOR NEXT