டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் பவர்பிளே, இறுதிக்கட்ட ஓவர்கள், நாக் அவுட் போட்டிகள் என எந்த பகுதியாக இருந்தாலும் இந்தியாவின் புகழ்மிக்க வீரரான விராட் கோலி தனது முத்திரையை பதித்து குறுகிய வடிவிலான போட்டியிலும் ரன் இயந்திரமாக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் அடிலெய்டில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 16 ரன்களை எட்டிய போது, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி. 2012-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 23 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,065 ரன்களை வேட்டையாடி உள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்கள்…
> டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் விராட் கோலி 13 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இந்த சாதனையை வேறு எந்த பேட்ஸ்மேன்களும் எட்டவில்லை.
> டி 20 உலகக் கோப்பைகளில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 88.75 ஆகும். இவருக்கு அடுத்த இடத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி (54.62) உள்ளார்.
> ஆட்டமிழக்காத இன்னிங்ஸைத் தவிர்த்து டி20 உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸுக்கு விராட் கோலி சேர்த்த ரன்கள் 46.3 ஆகும். இது 10-க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களில் பேட் செய்த மற்ற வீரர்களை விட அதிகபட்சமாக உள்ளது. இந்தப்பட்டியலில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (38.67) அடுத்த இடத்தில் உள்ளார்.
> டி 20 உலகக் கோப்பைகளில் விராட் கோலி 27 சிக்ஸர்களையும் 97 பவுண்டரிகளையும், பறக்கவிட்டுள்ளார். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் வாயிலாக மட்டும் விராட் கோலி 550 ரன்கள் சேர்த்துள்ளார்.
> டி 20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் விராட் கோலி 308 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 உலகக் கோப்பைகளில் ஒரு அணிக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனும் இவ்வளவு ரன்கள் குவித்தது இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் 4 அரை சதங்கள் அடித்துள்ளார் கோலி. இதில் ஒரு முறை மட்டுமே அவர், ஆட்டம் இழந்துள்ளார்.
> டி 20 உலகக் கோப்பைகளில் இந்திய அணி சேர்த்த ரன்களில் 29.05 சதவீதம் விராட் கோலி எடுத்தவை. 20க்கும் மேற்பட்டஆட்டங்களில் விளையாடிய வேறு எந்த வீரரும் தங்கள் அணியின் ரன்களில் கால் பங்கிற்கு மேல் அடிக்கவில்லை. இந்த பட்டியலில் ஜெயவர்த்தனே (22.3 சதவீதம்) 2-வது இடத்தில் உள்ளார்.
> டி 20 உலகக் கோப்பைகளில் 17 முதல் 20 ஓவர்களில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் 199.03 ஆகும். இந்த வகையில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் (230.92), இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (206.94) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
> டி 20 உலகக் கோப்பைகளில் பவர் பிளேவில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 212 ஆக உள்ளது. இது பவர் பிளேவில் 100 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் அதிகபட்சமாக உள்ளது. பவர் பிளேவில் 205 பந்துகளை சந்தித்துள்ள விராட் கோலி ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.
> டி 20 உலகக் கோப்பைகளில் நாக் அவுட் ஆட்டங்களில் விராட் கோலி 3 அரை சதங்களுடன் 238 ரன்கள் அடித்துள்ளார். நாக் அவுட் ஆட்டங்களில் வேறு எந்த வீரரும் இந்த அளவிலான ரன்கள் சேர்த்தது இல்லை.
> டி 20 உலகக் கோப்பைகளில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலியின் சராசரி 113.33 ஆக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 144.84 ஸ்டிரைக்ரேட்டுடன் 680 ரன்கள் விளாசி உள்ளார். 6 முறை மட்டும் ஆட்டமிழந்துள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலியின் சராசரி 77 ஆகும்.