விளையாட்டு

பிசிசிஐ இடைக்கால தலைவர் பதவி: சுநீல் கவாஸ்கர் விடுவிப்பு

எம்.சண்முகம்

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான பிசிசிஐ இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் கேப்டன் சுநீல் கவாஸ்கரை அப்பதவியிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த முகுல் முத்கல் கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டது. இக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

இதையடுத்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஐபிஎல் போட்டிகளைக் கவனிக்க பிசிசிஐயின் இடைக்கால தலைவராக சுநீல் கவாஸ்கரை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஐபிஎல் தவிர, இதர கிரிக்கெட் வாரிய பணிகளைக் கவனிக்க சிவலால் யாதவ் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டதால், தன் நிலை குறித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுநீல் கவாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், இப்ராஹிம் கலிபுல்லா அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஐபிஎல் பணியில் இருந்து சுநீல் கவாஸ்கரை விடுவித்த நீதிபதிகள், சிவலால் யாதவ் இந்திய கிரிக்கெட் வாரிய பணிகளை கவனிப்பார் என உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT