விராட் கோலி 
விளையாட்டு

T20 WC | வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 184 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி இருந்தனர்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித், 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அவர் பவுண்டரி லைனில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஒன்றை வங்கதேச அணி மிஸ் செய்திருந்தது.

பின்னர் முதல் விக்கெட்டிற்கு ராகுலுடன் இணைந்தார் கோலி. இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், அதிரடியாக இன்னிங்ஸை அணுகினார். 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்டியா, 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தினேஷ் கார்த்திக், 7 ரன்களில் ரன் அவுட்டாகி இருந்தார்.

மறுபக்கம் கோலி 37 பந்துகளில் அரை சதம் விளாசினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பையில் அவர் பதிவு செய்துள்ள மூன்றாவது அரை சதம் ஆகும். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார் அஸ்வின். கோலி, 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டுகிறது.

SCROLL FOR NEXT