புதுச்சேரி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதே டி20 உலகக் கோப்பை தொடரில் இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் கடந்த 2016 வாக்கில் பலப்பரீட்சை செய்தன. அந்தப் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒவ்வொருவரும் மறக்க முடியாத ஒன்று. அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.
2016 டி20 உலகக் கோப்பை தொடரில் பெங்களூரு நகரில் இரு அணிகளும் சூப்பர் 10 சுற்றில் பலப்பரீட்சை செய்தன. அதில் டாஸை வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் அந்த அணி 9 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் வரிசையாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா. அதில் கடைசி பந்தில் பை ரன் எடுக்க முயன்றனர் வங்கதேச பேட்ஸ்மேன்கள். ஆனாலும் அதை லாவகமாக பிடித்த தோனி, மின்னல் வேகத்தில் ஓடி வந்து ரன் அவுட் செய்திருப்பார்.
அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். அந்தப் போட்டிக்குப் பிறகு இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.