அடிலெய்டு: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
டி 20 உலகக் கோப்பை தொடரில்இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி உத்வேகம் பெற முயற்சிக்கக்கூடும். தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களில் 22 ரன்களேசேர்த்துள்ள போதிலும் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. மேலும் பலம் குறைந்த வங்கதேச அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பார்முக்கு திரும்பக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
ஏனெனில் முஸ்தாபிஸூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஜ், ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூத் ஆகியோரை உள்ளடக்கிய வங்கதேச அணியின் பந்து வீச்சுத்துறை தாக்கத்தை ஏற்படுத்திக் கூடிய அளவிலான உலகத்தரத்தில் இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்தை கே.எல்.ராகுல் சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த தினேஷ் கார்த்திக் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கக்கூடும். மேலும் தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக யுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஏனெனில் வங்கதேச அணி ரிஸ்ட் சுழற்பந்து வீச்சில் திணறக்கூடியது. 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த அணி ரிஸ்ட் சுழலில் 54 விக்கெட்களை தாரை வார்த்துள்ளது. இதனால் யுவேந்திர சாஹல் சவால்தரக்கூடும்.
வங்கதேச அணி 2 ஆட்டத்தில் வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலும் கூட பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினர். 3 ஆட்டங்களிலும் சேர்த்து அந்த அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் தொடக்க வீரரான ஷான்டோ மட்டுமே 100 ரன்களை எட்டியுள்ளார். அவரைத் தொடர்ந்து அஃபிப், மொசடக் ஹோசைன் ஆகியோரை நம்பியேஅணியின் பேட்டிங் உள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கில் பார்மின்றி தவிப்பது பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பந்து வீச்சிலும் அவர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் வங்கதேச அணியின் பலவீனங்களை இந்திய வீரர்கள்பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்திய அணி பலப்படுத்திக் கொள்ள முடியும். முன்னதாக இதே மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து – ஜிம்பாப்வே மோதுகின்றன.
வானிலை எப்படி? - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் போட்டி கைவிடப்படக்கூடிய அளவுக்கு மழை பொழிவு இருக்காது.